நாமக்கல்
செல்போன் கடையில் திருட முயற்சி
|நாமக்கல்லில் செல்போன் கடையில் திருட முயற்சி நடந்தது.
நாமக்கல் பஸ்நிலையம் அருகே செல்போன் சர்வீஸ் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரவு வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் வந்து உள்ளனர். அவர்கள் கடையில் இருந்த மேலாளரிடம் வெளிநாட்டு பணத்தை மாற்ற வேண்டும். இந்திய பணம் எப்படி இருக்கும்? என கேட்டு பேச்சு கொடுத்து உள்ளனர். இந்திய பணத்தை கடையில் இருந்த நபர் எடுத்துகாட்டிய போது, அந்த பணத்தை வாங்கி பார்த்த வெளிநாட்டுகாரரில் ஒருவர், அதனை மணிபர்சுக்கு பின்னால் மறைத்து வைக்க முயன்று உள்ளார்.
இதை பார்த்த அங்கிருந்த மற்றொரு ஊழியர் அவரை கையும், களவுமாக பிடித்து சத்தம் போட்டார். உடனடியாக அங்கிருந்து ஓட்டம் பிடித்த 2 பேரும் சாலையில் தயார் நிலையில் நின்று கொண்டு இருந்த காரில் ஏறி தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வெளிநாட்டுகாரர்கள் பணத்தை திருட முயன்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.