< Back
மாநில செய்திகள்
வாலீஸ்வரர் கோவிலில் மேற்கூரையை பிரித்து கொள்ளை முயற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வாலீஸ்வரர் கோவிலில் மேற்கூரையை பிரித்து கொள்ளை முயற்சி

தினத்தந்தி
|
14 Jan 2023 12:28 AM IST

வாலீஸ்வரர் கோவிலில் மேற்கூரையை பிரித்து கொள்ளையர்கள் உள்ளே இறங்கி கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் சிலைகள் உள்ளிட்டவை பாதுகாப்பான அறைகளில் இருந்ததால், தப்பியது.

கொள்ளை முயற்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற இந்திய தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நேற்று முன்தினம் இரவு கோவிலின் குருக்கள் வழக்கம்போல் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலையில் பூஜைகள் செய்வதற்காக குருக்கள் கோவிலை திறந்தனர். அப்போது கோவிலின் மேற்கூரையில் காற்றோற்றட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பிலான கம்பி வலை பிரிக்கப்பட்டிருந்ததும், மேலும் அதன் வழியாக வேட்டிகளை கட்டி தொங்கவிட்டிருந்ததும் கண்டும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் கோவிலில் கடப்பாறைகள், கையுறைகள் உள்ளிட்டவை கிடந்தது. பீரோவும் திறந்து கிடந்தது. ஆனால் கோவிலில் பஞ்சலோக சிலைகள், உற்சவர் சிலைகள், நகைகள், உண்டியல் பணம் ஏதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து தகவலறிந்தும் மங்களமேடு போலீசார் தாமதமாக கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பாதுகாப்பான அறைகளில்...

பின்னர் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். பஞ்சலோக சிலைகள், உற்சவர் சிலைகள், நகைகள் அனைத்தும் பாதுகாப்பான அறைகளில் இருந்ததால், அவற்றை கொள்ளையடிக்க முடியாமல் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக கோவில் செயல் அலுவலர் கருணாகரன் கொடுத்த புகாரின்பேரில், மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், இரவு நேர காவலாளியை பணிக்கும் அமர்த்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரசித்தி பெற்ற வாலீஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்