திருநெல்வேலி
கல்லூரி பேராசிரியர் வீட்டில் கொள்ளை முயற்சி
|நெல்லையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. மற்றொரு ஆசிரியர் வீடு புகுந்து பணம் திருடப்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 50). இவர் குடும்பத்துடன் நாசரேத்தில் குடியிருந்து வருகிறார். அங்குள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சாந்திநகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஜேம்ஸ் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது, வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் நகை, பணம் இல்லாததால் மர்மநபர்கள் பொருட்களை சிதறிப்போட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜேம்ஸ் பாளையங்கோட்டை போலிசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியர் வீடு
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஆறுமுகத்தம்மாள் (29). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டைக் பூட்டி விட்டு பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டார். மீண்டும் அவர் மாலையில் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கங்கைகொண்டான் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.