< Back
மாநில செய்திகள்
திருச்சி அருகே ரெயில் மறியல் முயற்சி; 29 விவசாயிகள் கைது
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சி அருகே ரெயில் மறியல் முயற்சி; 29 விவசாயிகள் கைது

தினத்தந்தி
|
2 Oct 2023 3:02 AM IST

திருச்சி அருகே ரெயில் மறியலுக்கு முயன்ற 29 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜீயபுரம்:

காத்திருப்பு போராட்டம்

திருச்சி மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது. விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று காலை திருச்சி குடமுருட்டி, அய்யாளம்மன் படித்துறை அருகே திருச்சி-கரூர் வழித்தடத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள், சங்க கொடிகளை கைகளில் ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அப்போது காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவையும் கண்டித்து கோஷங்களை எழுப்பிவாறு, திருச்சியில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு எர்ணாக்குளம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர்.

இரும்பு கம்பிகளை...

முன்னதாக தண்டவாளங்களுக்கு குறுக்கே இரும்பு கம்பிகளை வைத்து தடுப்புகளை ஏற்படுத்தியதுடன், காளைகளை தண்டவாளத்தில் நிறுத்த முயன்றனர். ஆனால் அங்கு வந்த ரெயில்வே போலீசாரும், கோட்டை, ஜீயபுரம் போலீசாரும் அவர்களின் ரெயில் மறியல் முயற்சியை தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசாரை மீறி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறு தண்டவாளத்தில் நடந்து சென்றனர். இதையடுத்து விவசாயிகளை ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லெட்சுமி, ஜீயபுரம் சரக துணை சூப்பிரண்டு பாரதிதாசன், இன்ஸ்பெக்டர் பாலாஜி, கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் தடுத்து, கைது செய்து மெயின் ரோட்டிற்கு அழைத்து வந்தனர்.

29 பேர் கைது

இதில் 6 பெண்கள் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று குழுமணியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விவசாயிகளின் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்