கள்ளக்குறிச்சி
மத்திய அரசை கண்டித்து 3-வது நாளாக போராட்டம்:சின்னசேலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி :இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 110 பேர் கைது
|மத்திய அரசை கண்டித்து நேற்று 3-வது நாளாக நடந்த போராட்டத்தில், சின்னசேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இவர்களில் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம்,
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தொழிலாளர் விரோத 4 சட்டங்களை திரும்ப பெற்றிடக் கோரியும், படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலையை உருவாக்குதல், மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டிப்பது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி யினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாலை மறியல் போராட்டம் நடந்த நிலையில், 3-வது நாளான நேற்று காலை சின்னசேலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.
மக்கள் விரோத செயல்பாடு
இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் இரா. கஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கிருஷ்ணன், கிளைச் செயலாளர் சிவராமன், லூர்து சவுரிராஜன், விவசாய சங்க நிர்வாகி திருச்செல்வம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மஞ்சப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கே.ராமசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டை கண்டித்தும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்கவும், நீட் தேர்வை ரத்து செய்யவும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி தரவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தடுத்து நிறுத்திய போலீசார்
மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு, சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற பயணிகள் ரெயிலை மறிப்பதற்காக போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், கணபதி மற்றும் போலீசார், அவர்களை ரெயில் நிலையத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் 68 பெண்கள் உள்பட 110 பேரை கைது செய்த போலீசார், அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.