< Back
மாநில செய்திகள்
ஆலங்குளத்தில் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
தென்காசி
மாநில செய்திகள்

ஆலங்குளத்தில் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி

தினத்தந்தி
|
14 Aug 2023 12:15 AM IST

ஆலங்குளத்தில் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியது.

ஆலங்குளம்:

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதற்காக கடந்த 2 நாட்களாக பக்தர்கள் குடும்பத்துடன் சாரை சாரையாக வண்டிகளில் கோவிலுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து உள்ளனர். மேலும் பக்தர்களை பாபநாசம் சோதனை சாவடியிலேயே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து பின்னர் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு வனத்துறை மற்றும் காவல் துறையினர் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே குடில்கள் அமைத்து தங்கியிருந்த பொதுமக்களை இங்கு தங்க அனுமதி இல்லை என்று கூறி அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சொரிமுத்து அய்யனார் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை அறிந்த ஆலங்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், வனத்துறையினர் எந்தவித இடையூறும் செய்யாமல் கோவிலில் பொதுமக்களை தங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கோவிலில் பொதுமக்களை தங்க அனுமதிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். மேலும் கோவிலில் உள்ள பொதுமக்கள், அங்கு தங்க அனுமதி கிடைத்து விட்டதாகவும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்றும், இன்றும் பொருட்கள் கொண்டு வைப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் அங்கேயே தங்கி இருந்தனர். இதையடுத்து வருவாய் துறை, காவல் துறை, வனத்துறையினர் கோவிலுக்கு சென்று அங்கு தங்கி இருந்த பக்தர்களை கீழே அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு முன்பாக, வனத்துறை சார்பில் பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்கியுள்ள பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். ஆனால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை கீழே இறக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனர்.

மேலும் செய்திகள்