கவர்னர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்த முயற்சி; பா.ஜ.க. மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
|கவர்னர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த பா.ஜ.க. முயற்சிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருச்சூரில் மலையாள மனோரமா நியூஸ் சார்பில் 'இந்தியா - 75' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
கருத்தரங்கம்
இந்த கருத்தரங்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் சென்னையில் இருந்தபடி, காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-
முற்போக்கு சிந்தனை
இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டாட்சி கருத்தியலும் - விடுதலையால் பெற்ற உரிமைகளும் - அனைத்துவிதமான வளர்ச்சிக்கான முற்போக்கு சிந்தனைகளும் இணைந்துதான் இந்தியாவை இந்தளவுக்கு வளர்த்துள்ளன.
அடிக்கடி பேச்சுவார்த்தை
இந்தியாவின் வேற்றுமைகளை மதிக்கக்கூடியவராக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு இருந்தார். இந்தியா முழுவதும் இருந்த பல்வேறு மாநில முதல்-அமைச்சர்களோடு அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தினார். கடிதங்கள் எழுதினார். முதல்-அமைச்சர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களே பல்வேறு தொகுப்புகளாக வெளியாகி இருக்கிறது. இத்தகைய காரணங்களால்தான் இந்தியாவானது 75 ஆண்டுகள் வலிமையோடு நின்று கொண்டு இருக்கிறது.
75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுவது என்பது வெறும் கொண்டாட்டமாக இருக்கக்கூடாது. இன்னும் பல 100 ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையோடு இருப்பதற்கான திட்டமிடுதலாக நமது சிந்தனைகள் அமைய வேண்டும்.
கூட்டாட்சியின் அடிப்படை
வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை. வலிமையான, அதிகாரம் பொருந்திய, தன்னிறைவு பெற்றவையாக மாநிலங்கள் இருப்பது இந்தியாவுக்குவலிமைதானே தவிர, அது பலவீனமல்ல.
வலிமையான, வசதியான, தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களால் இந்தியாவுக்கு பயன்தானே தவிர, குறைவு ஏற்படாது. இந்தியாவின் மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவீதமாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும்தானே நன்மை கிடைக்கிறது?.
மத்திய அரசுக்கு பலம்
மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவீதம். தமிழ்நாட்டின் பங்கு என்பது இந்தியாவுக்குத்தானே நன்மை?. மாநில அரசுகள் மிகச்சிறப்பாக மாநிலங்களை வழிநடத்துவதால் மத்திய அரசு பலம் அடையுமே தவிர, பலவீனம் அடையாது.
இன்னும் சொன்னால், மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள்தான். மக்களின் அனைத்து அன்றாட தேவைகளையும் பார்த்து பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. எனவே, மாநில அரசுகளை தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு மாநிலங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பேச உரிமை இல்லை
இந்திய அரசானது கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பல்வேறு சிந்தனைகள் மோதும் களமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றங்களில், பேசுவதற்கான உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மறுக்கப்படுகிறது.
தி.மு.க. உறுப்பினர்கள் உள்பட 27 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள். கருத்தை சொல்வதற்கான களமான நாடாளுமன்றத்தில்கூட பேச உரிமை இல்லை. இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை.
கவர்னர்கள் மூலம் இரட்டை ஆட்சி
புதிய கல்விக்கொள்கை என்பது கல்வியை பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது. மத்திய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோத சட்டங்களாக இருக்கின்றன.
கவர்னர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப்பார்க்கிறது பா.ஜ.க. தலைமை. இவை அனைத்துக்கும் இடையில்தான் மாநிலங்களில் ஆட்சி நடத்தியாக வேண்டும். அரசியல் நடத்தியாக வேண்டும்.
நம்பிக்கை இழக்கவில்லை
மக்கள் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாக வேண்டும். அதற்காக நான் நம்பிக்கை இழக்கவில்லை.
இந்தியாவின் மிக நீண்ட வரலாறும், இந்திய மக்களின் சகோதர உணர்வும் இந்தியாவை நிச்சயம் காக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மலையாள மனோரமா நிர்வாக ஆசிரியர் மற்றும் இயக்குனர் ஜெயந்த் மேனன் மாத்யூ, செய்தி ஆசிரியர் ஜானி லூகோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.