செங்கல்பட்டு
ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சி; கொள்ளையனை பிடிக்க முயன்ற கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து
|ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றபோது, தன்னை பிடிக்க முயன்ற கணவன்-மனைவியை கத்தியால் குத்திய கொள்ளையனை பீகார் சென்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஜன்னல் கம்பியை அறுத்து...
சென்னையை அடுத்த மேடவாக்கம் ஐஸ்வர்யா கார்டன் 4-வது தெருவை சேர்ந்தவர் அருள் (வயது 30). இவர், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனுபிரியா. அருள், வேலை விஷயமாக வெளிநாடு சென்று உள்ளார். இதனால் அனுபிரியாவின் தந்தையான ஓய்வுபெற்ற ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான செல்வராஜ் (62), தாய் மகேஸ்வரி (58) ஆகியோர் கடந்த வாரம் மேடவாக்கம் வந்து மகளுடன் தங்கி உள்ளனர்.
கடந்த 4-ந் தேதி நள்ளிரவு அருள் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து விட்டு ஒவ்வொரு அறையாக சென்று திருடுவதற்கு ஏதாவது உள்ளதா? என நோட்டமிட்டான்.
கத்திக்குத்து
அப்போது சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த மகேஸ்வரி, அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அங்கிருந்த கொள்ளையன், கத்தியை காட்டி மிரட்டி மகேஸ்வரி அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றான். இதனால் பயந்து போன மகேஸ்வரி கூச்சலிட்டார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த செல்வராஜ், கொள்ளையனை மடக்கி பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன், கையில் இருந்த கத்தியால் செல்வராஜின் தலை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினான். இதனை தடுக்க வந்த அவருடைய மனைவி மகேஸ்வரியையும் கத்தியால் குத்திவிட்டு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதில் படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரது அலறல் சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே ஓடிவந்த அனுபிரியா, தனது பெற்றோர் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீகாருக்கு தப்பி ஓட்டம்
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிகரணை போலீசார் படுகாயத்துடன் இருந்த செல்வராஜ், மகேஸ்வரி இருவரையும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது, வடமாநில கொள்ளையன் என்பது தெரிந்தது.இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த இடங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையன் உருவ படத்தை காட்டி விசாரித்தனர். அதில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த மணிதேவ் சவுத்திரி (28) என தெரியவந்தது. சில வருடங்களுக்கு முன் கட்டிட வேலை தேடி சென்னைக்கு வந்து உறவினர்களுடன் தங்கி வேலை செய்து கொண்டே திருட்டில் ஈடுபட்டதும், தற்போது சொந்த ஊருக்கு ரெயிலில் ஏறிச்சென்றதும் தெரியவந்தது.
தனிப்படை
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் புஷ்பம், ஆல்பின் ராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதில் இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம், முதல் நிலை காவலர் செல்வகுமார், முகிலன் அடங்கிய ஒரு தனிப்படை போலீசார் விமானம் மூலம் பீகார் விரைந்து சென்று ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது ரெயிலில் வந்து இறங்கிய மணிதேவ் சவுத்திரியை தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் அவரை விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.சென்னையில் பல வருடங்களாக கட்டிட வேலை செய்து வந்த அவர், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. மேலும் சென்னையில் வேறு எங்காவது திருடி உள்ளாரா? எனவும் கைதான மணிதேவ் சவுத்திரியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.