செங்கல்பட்டு
உத்திரமேரூர் அருகே காவலாளியை தாக்கி வங்கியில் கொள்ளை முயற்சி
|உத்திரமேரூர் அருகே காவலாளியை தாக்கி வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது.
கொள்ளை முயற்சி
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த கரும்பாக்கத்தில் இந்தியன் வங்கி கிளை உள்ளது. இங்கு 6 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் அதே கிராமத்தை சேர்ந்த ஆபேல் (வயது 65) பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் காவலாளி ஆபேலை அடித்து உதைத்து கழிவறைக்குள் தள்ளி பூட்டி விட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.. முடியாமல் போகவே அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த காவலாளி ஆபேலை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இது சம்பந்தமாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் 500 மீட்டர் தூரம் அங்கும், இங்கும் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
வங்கியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கரும்பாக்கம் பகுதியில் காவலாளியை தாக்கி வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை முயற்சி கைவிடப்பட்டதால் அந்த வங்கியில் இருந்த பல லட்ச ரூபாய் தப்பியது.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.