ஈரோடு
வாடகை நிலுவை தொகையை வசூலிக்க அதிகாரிகள் சென்றபோது பெட்ரோலை உடலில் ஊற்றி கடைக்காரர் தீக்குளிக்க முயற்சி; புஞ்சைபுளியம்பட்டியில் பரபரப்பு
|புஞ்சைபுளியம்பட்டியில் வாடகை நிலுவை தொகையை வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் சென்றபோது பெட்ரோலை உடலில் ஊற்றி கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் வாடகை நிலுவை தொகையை வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் சென்றபோது பெட்ரோலை உடலில் ஊற்றி கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாடகை நிலுவை தொகையை
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமாக 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் தினசரி சந்தையை ஜோதி கமலம் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் நகராட்சி நிர்வாகத்துக்கு வாடகை நிலுவை தொகை வைத்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் வாடகை நிலுவை தொகையை வசூலிப்பதற்காக ஜோதி கமலம் என்பவரின் கணவர் ரவிச்சந்திரன் நடத்தி வரும் நகராட்சிக்கு சொந்தமான மளிகை கடைக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவத்தன்று சென்று உள்ளனர். அப்போது அவர்கள் தினசரி சந்தைக்கு நிலுவை தொகை உள்ளதால் இந்த மளிகை கடையை பூட்டி சீல் வைக்கப்போகிறோம் என கூறி உள்ளனர்.
தீக்குளிக்க முயற்சி
அதற்கு ரவிச்சந்திரன் கூறுகையில், 'என் பெயரில் உள்ள கடைக்கு முறையாக வாடகை செலுத்தி வருகிறேன். தினசரி சந்தை வாடகை நிலுவை பாக்கி தொகைக்கும் இந்த கடைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதுபற்றி ஏன் நோட்டீஸ் தரவில்லை. தினசரி சந்தை வாடகை பாக்கி தொகை வைத்துள்ள ஜோதி கமலத்துக்கு வேண்டும் என்றால் நோட்டீஸ் வழங்குங்கள். ஆனால் இந்த கடையை சீல் வைக்க அனுமதிக்க மாட்டேன்,' என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென பிளாஸ்டிக் டப்பாவில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த கடைக்காரர்கள் ஓடிச்சென்று, அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.