கடலூர்
ஆஞ்சநேயர் கோவிலில் திருட முயற்சி
|குமராபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த திருட்டு முயற்சி தொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த குமராபுரத்தில் பிரசித்தி பெற்ற 41 அடி உயர காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்வதற்காக நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அர்ச்சகர் பார்த்தசாரதி என்பவர் சென்றார். அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்குள்ள சாமி சிலைகள் இருக்கும் அறையின் பூட்டை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் அங்கு மக்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்த மர்மநபர்கள், கோவிலில் திருடும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரிந்தது. இதனால் சாமி அறையில் இருந்த வெள்ளி கவசம், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை திருடுபோகாமல் தப்பியது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கோவிலில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஆஞ்சநேயர் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி பூணூலை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கதாகும். இது தவிர இந்த கோவிலில் ஏற்கனவே ஒரு முறை திருட்டு முயற்சியும் நடந்துள்ளது.