திண்டுக்கல்
பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி
|நெய்க்காரப்பட்டியில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே உள்ள ஐவர்மலை பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 36). நேற்று இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது அவர் கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைப்பார்த்த வாலிபர்கள், மோட்டார் சைக்கிளில் கொழுமம் சாலையில் தப்பிச் சென்றனர்.
பின்னர் இதுகுறித்து குமரலிங்கம் போலீசில் பரமேஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார் கொழுமம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 வாலிபர்களும் போலீசாரிடம் சிக்கினர். பின்னர் அவர்கள் 2 பேரும் பழனி தாலுகா போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து தாலுகா போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த காதர் மகன் நியாஸ்தீன் (வயது 33), காதர்அலி மகன் உமர்முக்தர் பாரூக் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.