< Back
மாநில செய்திகள்
சரக்கு வாகனத்தில் 2.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி
நீலகிரி
மாநில செய்திகள்

சரக்கு வாகனத்தில் 2.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி

தினத்தந்தி
|
10 Jun 2022 7:42 PM IST

கோத்தகிரியில் இருந்து கூடலூருக்கு சரக்கு வாகனத்தில் 2½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோத்தகிரி

கோத்தகிரியில் இருந்து கூடலூருக்கு சரக்கு வாகனத்தில் 2½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஆடத்தொரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் நேற்று மதியம் சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி வருவதாக கோத்தகிரி வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம உதவியர்கள் அரிவாகரன், மோகன் குமார் மற்றும் காவலர் முஜாகிதீன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது காத்துக்குளி கிராமத்தில் இருந்து ஆடத்தொரை செல்லும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை 2 பேர் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

கடத்த முயற்சி

இதில் அவர்கள் பந்தலூர் அருகே உள்ள உப்பட்டி அத்திகுன்னாவை சேர்ந்த ஜூனேஷ் (வயது 29), மூட்டை தூக்கும் தொழிலாளி சேரம்பாடி கோரஞ்சாலை சேர்ந்த கவியரசன் (43) என்பதும், இவர்கள் கூடலூரை சேர்ந்த ஜோபின் என்பவருக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. மேலும் அதற்கு முன்பு ஒரு சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசியை ஏற்றி அனுப்பியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உடனடியாக சோதனைச்சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன், காவலர் தஸ்லீம், வட்ட வழங்கல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் பிடிபட்ட 2 பேரையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், சரக்கு வாகனம், மற்றும் 48 மூட்டைகளில் இருந்த 2½ டன் ரேஷன் அரிசி ஆகியவற்றை வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர்.

2 பேர் கைது

தொடர்ந்து அதிகாரிகள் அங்குள்ள தனியார் விடுதியை சோதனை செய்தனர். அப்போது அங்கு ஏராளமான சாக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், சரக்கு வாகனம் மற்றும் ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக ஜூனேஷ், கவியரசன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜூனேஷ் மற்றும் ஜோபின் கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்