< Back
மாநில செய்திகள்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
சென்னை
மாநில செய்திகள்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

தினத்தந்தி
|
22 Jun 2023 11:45 PM IST

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை போலீஸ் அலுவலகம் முன்பு மதியம் 1 மணியளவில் பெண் ஒருவர் திடீரென்று உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தீக்குளிக்க விடாமல் காப்பாற்றினார்கள். அவரது தலையில் தண்ணீர் ஊற்றப்பட்டது. அவர் தீக்குளிக்க முயற்சித்தது ஏன்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த பெண் கூறியதாவது:-

எனது பெயர் வரலட்சுமி (வயது 56). நான் கூடுவாஞ்சேரியில் வசிக்கிறேன். சென்னை பழவந்தாங்கல் நேரு காலனியில் எனது கணவருக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்பனை செய்தோம். கட்டுமான நிறுவன அதிபர்கள் 2 பேர், தரகர்கள் 2 பேர் சேர்ந்து அந்த இடத்தை ரூ.1.71 கோடிக்கு விலை பேசி வாங்கினார்கள். வருமான வரி பிரச்சினை ஏற்படும் என்று கூறி விலையை குறைத்து காண்பிக்க சொன்னார்கள்.

பின்னர், கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை கொடுத்தனர். ரூ.1.21 கோடி வரை கொடுத்துவிட்டு மீதி ரூ.50 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். இதுதொடர்பாக பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் எனது கணவர் புகார் கொடுத்தார். ஆனால் அங்கு வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை வேண்டும் என்றே அலைய வைத்தார். இதனால் மனம் உடைந்த எனது கணவர் இறந்துவிட்டார். நான் தனிமையில் அந்த பணத்தை பெற போராடுகிறேன். உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு வர வேண்டிய பணத்தை வசூலித்து தர வேண்டும். இதை வலியுறுத்திதான் நான் தீக்குளிக்க முயற்சித்தேன்.

இவ்வாறு அந்த பெண் கூறினார்.

அவர் கூறிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் கமிஷனர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்