< Back
மாநில செய்திகள்
மண்எண்ணெய் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயற்சி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மண்எண்ணெய் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயற்சி

தினத்தந்தி
|
18 Jun 2023 1:13 AM IST

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் 7-வது தெரு பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது மகன் சதாம் உசேன் (வயது 32). இவர் நேற்று பிற்பகல் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திடீரென எடுத்து தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று சதாம் உசேனை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

வாகன கடன்

பின்னர் சதாம் உசேனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம், 'நான் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்று, அதன்மூலம் மோட்டார் சைக்கிள் வாங்கினேன். அதற்கு 3 மாத தவணைத்தொகை செலுத்தவில்லை. இதனால் மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனத்தினர் எடுத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து கேட்டபோது என்னை கடத்திச் சென்றனர். பின்னர் போலீசார் உதவியுடன் மீண்டு வந்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், அந்த புகார் மீது போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றேன்' என்று கூறினார்.

இதையடுத்து அவரை போலீசார் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்