திண்டுக்கல்
பெண் தீக்குளிக்க முயற்சி
|பழனி தாலுகா அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி வரதமாநதி அணை அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் பரமசிவம். விவசாயி. அவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 42). நேற்று இவர், பழனி தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அலுவலகம் முன்பு வந்து, திடீரென தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்து மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் மாரியம்மாளை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சொத்து பிரச்சினை காரணமாக மாமரங்களை சேதப்படுத்தியவர்கள் மீது பழனி தாலுகா போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி தாலுகா அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.