< Back
மாநில செய்திகள்
மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

தினத்தந்தி
|
13 Jun 2022 7:28 PM IST

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்வுநாள் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அவர்களிடமிருந்து, கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 358 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

வீட்டுமனை பட்டா

வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வீடடுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தோம். இதுகுறித்து வாணியம்பாடி தாசில்தாரிடம் பலமுறை சென்று கேட்டோம். வளையாம்பட்டு பகுதியில் இடம் வழங்குவதாக கூறினார். அதன்பேரில் அவர் கேட்ட பணமும் கொடுத்து விட்டோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்.

தற்போது தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பட்டா வழங்க முடியாது என்று கூறுகிறார். எனவே எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தீக்குளிக்க முயற்சி

திருப்பத்தூரை சேர்ந்த அன்பரசி (வயது 40) என்ற பெண் கொடுத்துள்ள மனுவில், தனது வீட்டை, சகோதரர் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கு நுழைவு வாயில் முன்பு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன குமாரன், உதவி ஆணையர் (கலால்) பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்