சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: தொழிலாளி போக்சோவில் கைது
|சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு தமிழ்நாடு மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர். அந்த தோட்டத்தில் ஜெய்சங்கர் (வயது 48) என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி குளியல் அறைக்கு அழைத்து சென்று உள்ளார்.
பின்னர் அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டனர். இதையடுத்து ஜெய்சங்கர் அங்கிருந்து கோவைக்கு தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொலக்கம்பை போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஜெய்சங்கர் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் கோவையில் இருந்து திரும்பிய ஜெய்சங்கர் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவர் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.