< Back
மாநில செய்திகள்
அரசு கேபிள் டி.வி.யை முடக்கி தனியார்மயமாக்க முயற்சி
விழுப்புரம்
மாநில செய்திகள்

அரசு கேபிள் டி.வி.யை முடக்கி தனியார்மயமாக்க முயற்சி

தினத்தந்தி
|
26 Nov 2022 12:15 AM IST

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட அரசு கேபிள் டி.வி.யை முடக்கி தனியார்மயமாக்க முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. குற்றம்சாட்டினார்

விழுப்புரம்

செயல்படாத அரசாக

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட அரசு கேபிள் டி.வி. கடந்த 10 நாட்களாக முடங்கியிருக்கிறது. அரசு கேபிள் டி.வி. நடத்தும் நிறுவனத்துக்கும், அரசுக்கும் இருக்கிற கருத்து வேறுபாடுகளை பேசிதீர்க்க வேண்டும்.

தற்போது 2 தனியார் சேனல்கள் வீடு, வீடாக சென்று இனி அரசு கேபிள் டி.வி. எடுக்காது, நாங்கள் கொடுக்கும் சேனல்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்றுகூறி வருகின்றனர். அரசு கேபிள் டி.வி.யை முடக்கி அவர்களது குடும்பத்துக்கு சொந்தமான சேனல்களை வழங்கி மிகப்பெரிய ஊழல் செய்ய பார்க்கிறார்கள். அரசு கேபிள் டி.வி. மீண்டும் செயல்பட தனியார் மயமாவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

கவர்னரிடம் புகார்

நாங்கள் கவர்னரிடம் சென்று தி.மு.க. செய்துள்ள ஊழல், சட்டம்- ஒழுங்கு சீரழிவு, சாராய, மது விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை ஆகியவை பற்றி ஆதாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளோம். ஆனால் ஆதாரமே இல்லை என்று தொழில்துறை அமைச்சர் கூறுகிறார். அதை படித்தாரா? படித்து மறைத்துவிட்டாரா? என தெரியவில்லை. நம்மஊரு சூப்பர் என்கிறார்கள். அத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 12,500 ஊராட்சி ஒன்றியங்களில் பேனர் வைப்பதில் ஊழல் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து அதிகாரிகள், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்றைக்கு அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர்காக்கும் மருந்து தட்டுப்பாடு உள்ளது.

ஒப்பந்த முறைகேடுகள்

இன்றைக்கு எல்லாத்துறையிலும் ஊழல் மலிந்திருக்கிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவர்களை இந்த அரசு வஞ்சித்து வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையை கையில் வைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள். டி.டி.வி. தினகரனை நம்பிச்சென்ற 18 எம்.எல்.ஏ.க்களின் நிலைமை என்ன? ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழுக்க காரணம் டி.டி.வி. தினகரன். ஜெயலலிதா பெயரை உச்சரிப்பதற்குகூட அவருக்கு தகுதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்