திருச்சி
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க முயற்சி
|கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 15 ரெயில்கள் விருத்தாசலம் வழியாக செல்கின்றன. இந்த ரெயில்களில் முன்பதிவு பெட்டிகள் தினமும் 100 சதவீதம் நிரம்பிவிடும். அதைத்தவிர முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்த ரெயில்களில் கன்னியாகுமாியில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12634) ரெயிலும் ஒன்று. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.46 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. திருச்சிக்கு நள்ளிரவு 12.31 மணிக்கு வந்த அந்த ரெயில் 12.45 மணிக்கு விருத்தாசலம் நோக்கி புறப்பட்டது. இந்த ரெயிலில் என்ஜின் டிரைவராக ரகுராமன், உதவி என்ஜின் டிரைவராக வினோத் ஆகியோர் பணியில் இருந்தனர்.
தண்டவாளத்தில் டயர்
நள்ளிரவு 1.05 மணிக்கு திருச்சியில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரம் அருகே உள்ள வாளாடி ரெயில் நிலையத்தை கடந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மேளவாளாடி பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தின் நடுவில் கருப்பு நிறத்தில் தடுப்பு போன்று பொருட்கள் இருந்ததை என்ஜின் டிரைவர் கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ரெயிலை நிறுத்த முயன்றார்.
ஆனால் அதற்குள் அந்த கருப்பு பொருளின் அருகே ரெயில் வந்துவிட்டது. அப்போது தான், தண்டவாளத்தில் லாரி டயர் படுக்கைவசத்தில் போடப்பட்டு, அதன் மீது மற்றொரு டயரை நிற்க வைத்து இருப்பது தெரியவந்தது. டிரைவர் பிரேக் பிடித்தாலும், ரெயில் என்ஜின் அவற்றின் மீது மோதி சிறிது தூரத்தில் சென்று நின்றது. ரெயில் என்ஜின் மோதிய வேகத்தில் அந்த டயர்களில் ஒன்று என்ஜினில் சிக்கியது. அத்துடன், என்ஜினையும், பெட்டிகளையும் இணைக்கும் கப்-லிங் பகுதியில் பெட்டிகளுக்கு செல்லும் கருப்பு நிற வேக்கம் டியூப் கிளிப் மற்றும் பீடு டியூப் கிளிப் கழன்று விழுந்தது.
நடுவழியில் நிறுத்தம்
இதனால் பயணிகள் இருந்த பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், ரெயிலை மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. திடீரென பெட்டிகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், திடீரென ரெயில் நடுவழியில் நின்றதாலும், தூங்கிக்கொண்டு இருந்த பயணிகள் திடுக்கிட்டு கண் விழித்தனர். மேலும் இருள் சூழ்ந்திருந்ததை கண்டு அச்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கீழே இறங்கி வந்தனர். மேலும் ரெயில் என்ஜின் டிரைவரும், உதவியாளரும் கீழே இறங்கி பார்த்தனர்.
அப்போது, லாரி டயரில் ஒன்று மட்டும் என்ஜினுக்கு அடியில் சிக்கி இருந்தது. படுக்கை வசத்தில் கிடந்த டயர் அதே இடத்தில் கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் சதிச்செயலில் ஈடுபடும் வகையில் தண்டவாளத்தில் லாரி டயரை வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. உடனே என்ஜின் டிரைவர் அருகில் உள்ள வாளாடி ரெயில் நிலைய அதிகாரிக்கும், ரெயில் மேலாளருக்கும் நடந்த சம்பவம் பற்றி தகவல் கொடுத்தார்.
போலீசார் விசாரணை
அத்துடன், என்ஜினில் சிக்கி இருந்த டயரை என்ஜின் டிரைவரும், உதவியாளரும் அப்புறப்படுத்தி அருகில் உள்ள முட்புதரில் வீசினர். பின்னர், வேக்கம் டியூப் கிளிப் மற்றும் பீடு டியூப் கிளிப்களை சுமார் அரை மணிநேரம் போராடி பொருத்தினர். இதைத்தொடர்ந்து அந்த ரெயில் 1.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை உதவி பாதுகாப்பு கமிஷனர் சின்னத்துரை தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த டயர்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
ரெயிலை கவிழ்க்க சதி
ேபாலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த இடத்தை நள்ளிரவு 12.37 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றதும், நள்ளிரவு 1.05 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வரும்போது டயர் வைக்கப்பட்டதும், அது என்ஜினில் சிக்கி சுமார் 600 மீட்டர் தூரம் இழுத்துச்சென்றதும், அப்போதுதான் வேக்கம் டியூப் கிளிப், பீடு டியூப் கிளிப்கள் கழன்று ரெயில் நின்றதும் தெரியவந்தது.
இதனால் இடைப்பட்ட நேரத்தில் தான் மர்ம நபர்கள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து நாசவேலையில் ஈடுபட்டதும், டிரைவர் அதை கவனித்து சரியான நேரத்தில் பிரேக் பிடித்து, சாமர்த்தியமாக செயல்பட்டதால் அந்த சதி முறியடிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடம் போலீசாரும், திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலைவீச்சு
மேலும் இதுகுறித்து ஸ்ரீரங்கம் ரெயில்வே இளநிலை பொறியாளர் முத்துக்குமரன் (வயது 34) விருத்தாசலம் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டயர்களை தண்டவாளத்தில் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி வேலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.