< Back
மாநில செய்திகள்
அமைச்சர் கீதா ஜீவன் வீடு, அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - பாஜகவினர் 100 பேர் கைது
மாநில செய்திகள்

அமைச்சர் கீதா ஜீவன் வீடு, அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - பாஜகவினர் 100 பேர் கைது

தினத்தந்தி
|
23 Dec 2022 1:49 PM IST

பா.ஜனதா தொண்டர்கள் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர்.

தூத்துக்குடி,

பா.ஜனதா மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில தலைவர் அண்ணாமைலை குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் கீதாஜீவன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில், பா.ஜனதா தொண்டர்கள் இன்று தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

தொடர்ந்து அவர்கள் தனசேகரன் நகரில் இருந்து போல் பேட்டையில் உள்ள அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், துணைத்தலைவர்கள் வக்கீல் வாரியார், சுவைதர், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாநில நிர்வாகிகள் விவேகம் ரமேஷ், வக்கீல் நாகராஜன் உள்பட திரளானோர் சென்றனர்.

புதிய பஸ்நிலையம் அருகே சென்றபோது அவர்களை டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் போலீசார், அனுமதி இல்லாமல் ஊர்வலமாக செல்லக்கூடாது எனவும், திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

தொடர்ந்து அவர்கள், அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவதற்காக சென்றனர். இதைய டுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் அதிரடிப்படையினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது முற்றுகையிட சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

எனினும் அதனை மீறி பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்