சென்னை
கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் சொன்னதால் ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயற்சி - 3 பேர் கைது
|கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் சொன்னதால் ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி காந்தி நகர் பல்லவன் சாலை 3-வது தெரு 'டி- பிளாக்' பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் மதியம் தீவுத்திடல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் திடீரென்று கத்தியால் தாக்கியது. உயிர் பயத்தில் வெங்கடேஷ் தப்பி ஓடினார். சினிமா பாணியில் அந்த கும்பல் அவரை கத்தியுடன் விடாமல் துரத்தி சென்றது. அதிர்ஷ்டவசமாக அந்த கும்பலிடம் சிக்காமல் வெங்கடேஷ் தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேசை கொலை செய்ய வந்த கும்பல் காந்தி நகர் 7-வது தெருவை சேர்ந்த லோகேஷ் (19), சிந்தாதிரிப்பேட்டை நெடுஞ்செழியன் காலனியை சேர்ந்த ஜேக்கப் ஒபிராயன் (23), சிந்தாதிரிப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்த 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்கள் போலீசார் பிடியில் சிக்கினார்கள். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'வெங்கடேஷ் பல்லவன் சாலை காந்தி நகரில் கஞ்சா விற்பனை உள்பட சட்டவிரோத செயல்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்தார். எனவே அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தோம். ஆனால் அவர் தப்பி விட்டார்.' என்று தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் லோகேஷ் மீது திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் 4 அடிதடி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.