< Back
மாநில செய்திகள்
குடும்ப பிரச்சினையில்  கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி
தேனி
மாநில செய்திகள்

குடும்ப பிரச்சினையில் கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி

தினத்தந்தி
|
7 July 2023 12:15 AM IST

போடி அருகே குடும்ப பிரச்சினையில் கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற அவரது மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெட்டி கொல்ல முயற்சி

போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 41). ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி வாணி (35). இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பாண்டி அதே பகுதியில் உள்ள தனது மைத்துனர் பிரதீப் குமார் (24) என்பவரது வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரதீப் குமார், பாண்டியை அழைத்து கொண்டு வாணியிடம் சமாதானம் பேச சென்றார். அப்போது வாணியும், அவரது தம்பி மணிகண்டன் (32) என்பவரும், அவர்களை மறித்து தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாண்டியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றார்.

2 பேர் கைது

இதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போடி தாலுகா போலீசில் பிரதீப் குமார் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மற்றும் கொலை செய்ய தூண்டியதாக வாணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். குடும்ப பிரச்சினையில் ஆட்டோ டிவைரை வெட்டி கொல்ல முயன்ற மனைவி உள்பட 2 பேர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்