விழுப்புரம்
3 பேர் மீது டீசல் ஊற்றி கொலை செய்ய முயற்சி
|செல்போன் கோபுரம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் மீது டீசல் ஊற்றி கொலை செய்ய முயற்சி சரக்கு வாகன டிரைவர் கைது
விழுப்புரம்
திண்டிவனம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் தனசிங்(வயது 49). இவர், தனியார் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். தற்போது விழுப்புரம் அருகே சானிமேட்டில் உள்ள கிருஷ்ணன் என்பவருடைய நிலத்தில் அரசு அனுமதியுடன் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த நிலத்திற்கு அருகில் வசிக்கும் சானிமேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன்(42) என்ற சரக்கு வாகன டிரைவர், அப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சென்று இங்கு செல்போன் கோபுரம் கட்டக்கூடாது என்று பிரச்சினை செய்தார். மேலும் அவர், அங்கிருந்த திருவண்ணாமலை வேங்கிகாலை அடுத்த துர்க்கை நம்பியந்தல் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன்(23), கடலூர் புவனகிரியை அடுத்த நல்லாண்பட்டினத்தை சேர்ந்த குமரேசன்(30), விழுப்புரம் சானிமேட்டை சேர்ந்த காந்திமதி(60) ஆகியோர் மீது டீசலை எடுத்து ஊற்றி கொலை செய்ய முயன்றார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி அவர்களை காப்பாற்றினர்.
இதுகுறித்து தனசிங், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பாலமுருகன் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.