சேலம்
பிளஸ்-2 மாணவியை கடத்த முயற்சி
|ஓமலூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்த முயன்றதாக மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்:-
ஓமலூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்த முயன்றதாக மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 பேருக்கு தர்ம அடி
ஓமலூரை அடுத்த ராமமூர்த்தி நகர் பகுதி சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கு வந்த 3 வாலிபர்கள், அந்த மாணவியை தெரியும் என அங்கிருந்த ஆசிரியரிடம் கூறி மாணவியை பேச அழைத்ததாக தெரிகிறது.
ஆனால் அவர்கள் யார் என்றே தனக்கு தெரியாது என்று அந்த மாணவி ஆசிரியரிடம் கூறி உள்ளார். உடனடியாக ஆசிரியர், அந்த மாணவியின் பெற்றோருக்கு செல்போனில் ெதாடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த மாணவியின் சித்தப்பா மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து பள்ளி வளாகத்தில் மாணவியின் வருகைக்காக காத்திருந்த வாலிபர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
மாணவர்கள்
இதையடுத்து பிடிபட்ட அந்த வாலிபர்களிடம் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டையில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வரும் வாலாஜா பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சதீஷ்குமார் (வயது 23), ரஞ்சித்குமார் மகன் நவீன் (19), பழனி என்பவர் மகன் விக்னேஸ்வரன் (20) என்பது தெரியவந்தது. இவர்களில் நவீன் பாரா மெடிக்கல் டிப்ளமோ படிப்பும், விக்னேஸ்வரன் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் பட்டப்படிப்பும் படித்து வரும் மாணவர்கள் என்பது தெரியவந்தது.
விசாரணையில் மாணவியின் வீட்டின் அருகே வசித்து வரும் பெண் ஒருவர் வேலூரில் உள்ள தோல் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவர் ராமமூர்த்தி நகருக்கு வரும் போது அந்த பெண் தன்னுடன் வேலை பார்த்து வரும் சதீஷ்குமார் என்பவருடன் போனில் பேசியதாக தெரிகிறது. அப்போது இந்த மாணவியும் அவர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது.
கைது
இதைத்தொடர்ந்து சதீஷ்குமார், விக்னேஸ்வரன், நவீன் ஆகிய 3 பேரும் வேலூர் ராணிபேட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் மாணவி படிக்கும் ராமமூர்த்தி நகர் அரசு பள்ளிக்கு வந்து மாணவியை கடத்த முயன்றதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து பள்ளி மாணவியை கடத்த முயன்றதாக சதீஷ்குமார், நவீன், விக்னேஸ்வரன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு ெசய்து அவர்களை கைது செய்தனர்.