< Back
மாநில செய்திகள்
ஜவுளி கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயற்சி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ஜவுளி கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயற்சி

தினத்தந்தி
|
22 March 2023 12:30 AM IST

வேடசந்தூரில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த ஜவுளி கடை உரிமையாளரிடம் 2 மர்ம நபர்கள் பணம் பறிக்க முயன்றனர்.

வேடசந்தூர் கோகுல் நகரை சேர்ந்தவர் மாதவன் (வயது 45). இவர் பெரிய கடை வீதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இ்ரவு ஜவுளி விற்ற ரூ.50 ஆயிரத்தை ஒரு பையில் எடுத்து வைத்தார். பின்பு கடையை பூட்டி விட்டு மாதவன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கோவிலூர் ரோட்டில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரை, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மறித்தனர். பின்னர் மாதவன் முகத்தில் ஸ்பிரே ஒன்றை ஒரு மர்ம நபர் அடித்தார். அதில் அவர் கண்கள் திறக்க முடியாமல் எரிச்சல் அடைந்து 'அய்யோ, அம்மா' என்று அலறினார்.

உடனே கண்இமைக்கும் நேரத்தில் ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து மாதவன் வைத்திருந்த பணப்பையை பறிக்க முயன்றார். மாதவன் பையை விடாமல் பிடித்து கொண்டு திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அந்த மர்ம நபர் பணப்பையை பறிப்பதற்காக அவரை கீழே தள்ளி விட்டார். ஆனாலும் பணப்பையை இறுக்கி பிடித்து கொண்டு அந்த மர்ம நபருடன் மாதவன் போராடினார். அதற்குள் அந்த பகுதியில் ஆட்கள் வருவதை அறிந்த மர்ம நபர்கள் பணப்பையை பறிப்பதை விட்டு, விட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பின்னர் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காயம் அடைந்த மாதவனை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்