தூத்துக்குடி
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயற்சி; 2 ரவுடிகள் கைது
|தூத்துக்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்றதாக 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கங்கைநாதபாண்டியன், முகிலரசன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி பெரியகோவில் தெரு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். உடனே அவர்கள் 2 பேரும், மறைத்து வைத்து இருந்த அரிவாளால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் உள்ளிட்டவர்களை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பெரிய கோவில் தெருவை சேர்ந்த சந்தனராஜ் என்ற சாண்டல் (வயது 42), தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டை சேர்ந்த செல்வம் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தனராஜ், ஏற்கனவே குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தென்பாக போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மேலும் சந்தனராஜ் மீது ஏற்கனவே 19 வழக்குகளும், செல்வம் மீது ஏற்கனவே 7 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.