< Back
மாநில செய்திகள்
திருப்பூர் கலெக்டர் பெயரில் மோசடி செய்ய முயற்சி - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
திருப்பூர்
மாநில செய்திகள்

திருப்பூர் கலெக்டர் பெயரில் மோசடி செய்ய முயற்சி - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
9 Jun 2022 6:01 PM IST

திருப்பூர் கலெக்டர் பெயரில் வாட்ஸ் அப் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடியில் ஈடுபட முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்


திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களாக செல்போனில் வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி சென்றது. வாட்ஸ் அப் புரோபைல் படத்தில் கலெக்டர் வினீத் புகைப்படம் இருந்தது. எஸ்.வினீத் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 63783 70419 என்ற எண்ணில் இருந்து வாட்ஸ் அப் வந்தது. அதில் வேலை எவ்வாறு செல்கிறது? எப்படி இருக்கிறீர்கள்? என்று உரையாடல் குறுஞ்செய்தி வந்தது.

அதற்கு பதில் அளிக்கும்போது கிப்ட் வவுச்சர் உள்ளது. அதற்கு வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்குமாறு குறுஞ்செய்தி வந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் உடனடியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் தெரிவித்தார்கள். கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி நூதன முறையில் மர்ம ஆசாமிகள் மோடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளார். முதல்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட செல்போன் எண், ராஜஸ்தானில் இருந்து இயங்குவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இதுபோல் கலெக்டர் வினீத்தின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி ஏதாவது செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ் அப் குறுஞ்செய்தி வந்தால் உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்