ஈரோடு
சத்தியமங்கலம் அருகே அட்டகாசம் செய்தஒற்றை யானை பவானி ஆற்றை கடந்து சென்றது
|சத்தியமங்கலம் அருகே அட்டகாசம் செய்த ஒற்றை யானை பவானி ஆற்றை கடந்து சென்றது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை பவானி ஆற்றை கடந்து சென்றது. யானையை விரட்டும் பணியில் 2-வது நாளாக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஊருக்குள் புகுந்த யானை
சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்தது.
மேலும் ஊருக்குள் புகுந்த யானை உக்கரம் கிராமத்தில் இருந்து வயல் வெளிகள் ஓரமாய் ஓடி கோபி அருகே காசிபாளையத்தில் உள்ள கரும்பு தோட்டத்துக்குள் சென்று நின்று கொண்டது. இதைத்தொடர்ந்து கரும்புக்காட்டில் இருந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நேற்று முன்தினம் முழுவதும் வனத்துறையினர் போராடினர். ஆனால் கரும்பு தோட்டத்தை விட்டு யானை வெளியேறவில்லை.
ஆற்றை கடந்தது...
இந்த நிலையில் நேற்று காசிபாளையம் கரும்பு தோட்டத்தில் இருந்து யானை வெளியேறியது. பின்னர் சத்தியமங்கலம் அருகே உள்ள அக்கரை நெகமம் கிராமத்துக்குள் சென்றது. யானையை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அதன்பின்னர் யானை அங்கிருந்து இக்கரை நெகமம் வழியாக பவானி ஆற்றை கடந்து சென்றது. இது பற்றி வனத்துறையினர் கூறுைகயில், 'யானையை பார்த்தால் பொதுமக்கள் சத்தம்போட்டு துரத்தவேண்டாம். பொதுவெளிகளில் மக்கள் ஒன்று கூடி நிற்க வேண்டாம்' என்றனர். மேலும் மாவட்ட வன அதிகாரி கிருபா சங்கர் கூறும்போது, 'விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். மேலும் 50 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு யானையை விரட்டும் பணியில் 2-வது நாளாக ஈடுபட்டு வருகிறோம். யானையின் நடமாட்டம் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்' என்றார்.