விருதுநகர்
இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து நகை கேட்டு தாக்குதல்
|இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து நகை கேட்டு தாக்கிய வாலிபர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டது.
சாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார். இந்தநிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் வாலிபர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் போலீசாருக்கு தகவல் தெரிந்ததும், வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டு விசாரணைக்கு சென்றது. அப்போது அந்த வாலிபர் தனக்கு சாதகமாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தால் தான் நாம் சந்தோஷமாக வாழமுடியும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதை நம்பி அந்த பெண், நீதிமன்றத்தில் வாலிபருக்கு சாதகமாக வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வாலிபர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் வாலிபரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர். மேலும் நகைகளை வாலிபர் கேட்டுள்ளார். இதற்கு மறுத்த அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 10 பவுன் நகைகளை அந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம் இருந்து வாங்கி வா என்று வற்புறுத்தி உள்ளனர். இதற்கிடையில் கடந்த 23-ந் தேதி கோவைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அடுத்த நாள் மாலையில் போன் செய்து தனக்கும், மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்ததாக கூறி உள்ளார். இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.