< Back
மாநில செய்திகள்
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.22 ஆயிரம் கொள்ளை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.22 ஆயிரம் கொள்ளை

தினத்தந்தி
|
21 Jun 2023 12:15 AM IST

குலசேகரன்பட்டினத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.22 ஆயிரம் கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.22 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெட்ரோல் பங்க்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கல்லாமொழி அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு குலசேகரன்பட்டினம் தெற்கு தெருவைச் சேர்ந்த மகாராஜன் (வயது 67) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை சுமார் 11.30 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பங்க்கிற்கு வந்தனர். அங்கிருந்த மற்றொரு ஊழியரான குலசேகரன்பட்டினம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி (37) என்பவரிடம் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சொன்னார்கள்.

பணம் கொள்ளை

அவர்கள் பெட்ரோல் போட பணம் இல்லை. எனினும் பெட்ரோல் போடு என மணியை மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் அருகில் பணப்பையுடன் நின்ற மகாராஜனை தாக்கினர். மேலும் அவரது கையில் வைத்திருந்த பணப்பையை கொள்ளையடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றுவிட்டனர்.

அந்த பணப்பையில் ரூ.22 ஆயிரத்து 470 இருந்துள்ளது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மகாராஜன் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

இதுகுறித்து உடனடியாக குலசேகரன்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் பெட்ரோல் பங்க்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான 2 வாலிபர்களின் உருவத்தை வைத்து போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்