< Back
மாநில செய்திகள்
தலைமை ஆசிரியரை தாக்கி பள்ளிக்கு பூட்டுபோட்டபள்ளி நிர்வாகியை பிடிக்க தனிப்படை:கல்வித்துறைக்கு போலீசார் அறிக்கை
தேனி
மாநில செய்திகள்

தலைமை ஆசிரியரை தாக்கி பள்ளிக்கு பூட்டுபோட்டபள்ளி நிர்வாகியை பிடிக்க தனிப்படை:கல்வித்துறைக்கு போலீசார் அறிக்கை

தினத்தந்தி
|
13 April 2023 6:45 PM GMT

தேனியில் தலைமை ஆசிரியரை தாக்கி பள்ளிக்கு பூட்டுபோட்ட பள்ளி நிர்வாகியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதுகுறித்து கல்வித்துறைக்கு போலீசார் அறிக்கை அளித்தனர்.

பள்ளிக்குள் தாக்குதல்

தேனி சுப்பன்தெரு திட்டச்சாலையோரம் மகாராஜா தொடக்கப்பள்ளி உள்ளது. இது அரசு உதவி பெறும் பள்ளி. இந்த பள்ளியின் நிர்வாகியான அன்பழகன், கடந்த 11-ந்தேதி பள்ளிக்கு வந்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சென்றாயப் பெருமாளை அவர் தாக்கிவிட்டு, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் பங்களாமேடு நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே தலைமை ஆசிரியரை, பள்ளி நிர்வாகி அன்பழகன் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. தாக்கப்பட்டது குறித்து தலைமை ஆசிரியர் சென்றாயப்பெருமாள் கொடுத்த புகாரின் பேரில், அன்பழகன் மீது தேனி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

தனிப்படை

இதையடுத்து அவர் தலைமறைவானார். போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், அன்பழகனை பிடிக்க இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள அன்பழகன் அல்லிநகரத்தில் உள்ள மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இதனால், அவர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுப்பதற்காக இந்த வழக்குப்பதிவு செய்த விவரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, இன்ஸ்பெக்டர் மாயாராஜாலட்சுமி அறிக்கை அளித்துள்ளார். அதன்பேரில் துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்