வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மனைவி மீது தாக்குதல் - முன்னாள் ராணுவ வீரர் கைது
|வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்,
வேலூர் அருகே உள்ள சின்னப்பாலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சுபாஷினி. இவர்களுக்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வேல்முருகன் அடிக்கடி மது அருந்தி வந்து மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுபாஷினி இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தார்.அப்போது அவரது கணவர் வேல்முருகன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்கும் இடத்தில் சுபாஷினி நிற்பதை கண்டு கடும் ஆத்திரமடைந்து சுபாஷினியை பிடித்து இழுத்து மனு கொடுக்க விடாமல் தடுத்துள்ளர்.அப்போது சுபாஷினிக்கு காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அங்கிருந்த போலீசார் வேல்முருகனை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் எனது மனைவியை நான் அழைத்துச் செல்கிறேன், உங்களுக்கு என்ன என கேள்வி எழுப்பினார். சத்தம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு வாங்கிக்கொண்டிருந்த அதிகாரிகளும் வெளியே வந்தனர்.
தொடர்ந்து வேல்முருகன் அவரது மனைவியை இழுத்து செல்ல முயன்றார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வேல்முருகனை கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து சுபாஷிணி கூறுகையில்,
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான வேல்முருகனுக்கும், எனக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. அவர் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறார். போதையில் கத்தியால் குத்த வருகிறார். மேலும் வீட்டில் அமர்ந்து நண்பர்களுடன் மது குடிக்கிறார். அவரிடம் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும்,அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.