நெல்லை அருகே பட்டியலின இளைஞர்கள் இருவர் மீது கஞ்சா போதையில் தாக்குதல் - 6 பேர் கைது
|நெல்லை மணி மூர்த்தீஸ்வரத்தில் கஞ்சா போதையில் பட்டியலின இளைஞர்கள் இருவரை தாக்கியதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை,
நெல்லை மணி மூர்த்தீஸ்வரத்தில் கஞ்சா போதையில் பட்டியலின இளைஞர்கள் இருவரை தாக்கியதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஆற்றுப்பகுதியில் மது அருந்திக்கொண்டு கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று, பட்டியலின இளைஞர்கள் இருவரை சாதியை கேட்டு தெரிந்து கொண்டு, மாலை முதல் நள்ளிரவு வரை தாக்கியுள்ளனர்.
அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், செல்போன், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொன்மணி (வயது 25), நல்லமுத்து (வயது 21), ஆயிரம் (வயது 19), ராமர் (வயது 22), சிவா (வயது 22), லட்சுமணன் (வயது 20), ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.