பெரம்பலூர்
அரசு பஸ்சில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவரை இறக்கிவிட்ட கண்டக்டர் மீது தாக்குதல்
|அரசு பஸ்சில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவரை இறக்கிவிட்ட கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கண்டக்டர் மீது தாக்குதல்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் சென்னை நோக்கி நேற்று மாலை புறப்பட்டது. பஸ்சை டிரைவர் சென்னை அம்பத்தூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 54) ஓட்டினார். கண்டக்டராக செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மெயின்ரோடு காமராஜர் தெருவை சேர்ந்த ரமேஷின் மகன் ஞானபிரகாசம் (34) என்பவர் பணியில் இருந்தார்.
அந்த பஸ் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்குள் வந்து நின்று, பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. அப்போது பஸ்சை விட்டு இறங்கிய கண்டக்டர் ஞானபிரகாசத்தை, பஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்து காத்துக் கொண்டிருந்த 2 பேர் சரமாரியாக தாக்கிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஸ்சில் இருந்து இறக்கிவிட்டார்
இதைத்தொடர்ந்து அந்த பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றி விட்ட டிரைவர் வெங்கடேசன், காயமடைந்த கண்டக்டர் ஞானபிரகாசத்தை சிகிச்சைக்காக அதே பஸ்சில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தார். அங்கு ஞானபிரகாசத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், மருத்துவமனைக்கு வந்து கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் சட்ட கல்லூரியில் படிக்கும் பெரம்பலூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் பிரவீன்குமார் அந்த பஸ்சில் ஏறியுள்ளார். அவரிடம், பஸ் பயண சலுகை கட்டணத்திற்கான மாற்றுத்திறனாளி அடையாள அட்டையின் நகல் தெளிவாக இல்லாததாலும், அதன் அசல் இல்லாததாலும், பயணச்சீட்டுக்கான தொகையை பெறாமல், அவரை கண்டக்டர் ஞானபிரகாசம் அடுத்த பஸ் நிறுத்தமான நம்பர் 1 டோல்கேட்டில் இறக்கிவிட்டது தெரியவந்தது.
3 பேர் மீது வழக்கு
இந்த சம்பவத்தை தொடர்ந்தே பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வைத்து கண்டக்டரை பிரவீன்குமாரின் தந்தை பன்னீர்செல்வம்(48), தம்பி நவீன்(22) ஆகியோர் சேர்ந்து தாக்கியது விசாரணையில் தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர். இதில் பன்னீர்செல்வம் வக்கீல் ஆவார்.
இது தொடர்பாக பிரவீன்குமாரின் தூண்டுதலின்பேரில் பன்னீர்ெசல்வம், நவீன் ஆகியோர் தாக்கியதாக கண்டக்டர் ஞானபிரகாசம் கொடுத்த புகாரின்பேரில் தந்தை-மகன்கள் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பிரவீன்குமார் தரப்பில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.