கோயம்புத்தூர்
தனியார் நிறுவன மேலாளரை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு
|கோவை அருகே ஓரினச்சேர்க்கைக்கு வரழைத்து தனியார் நிறுவன மேலாளரை தாக்கி பணம்- செல்போனை பறித்துச்சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கோவில்பாளையம்
கோவை அருகே ஓரினச்சேர்க்கைக்கு வரழைத்து தனியார் நிறுவன மேலாளரை தாக்கி பணம்- செல்போனை பறித்துச்சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஓரினச்சேர்க்கை செயலி
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 48 வயதானவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் ஆண்கள் மட்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்து இருந்தார்.
அந்த செயலி மூலம் அன்னூர் அருகே உள்ள செரயாம்பாளையத்தை சேர்ந்த 19 வயதான வாலிபர் ஒருவர் அறிமுகம் ஆனார். இதனால் அவர்கள் இருவரும் செல்போனில் குறுஞ்செய்தி மூலம் தகவல்களை பறிமாறி, பழகி வந்தனர்.
வாலிபரை பார்க்க சென்றார்
இந்த நிலையில் மேலாளருக்கு அந்த வாலிபரை சந்திக்க ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த வாலிபரிடம் நாம் நேரில் சந்தித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடலாம் என்று கூறினார். உடனே அந்த வாலிபர் செரயாம்பாளையம் அருகே யாரும் இல்லாத இடத்தில் நாம் சந்திக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து அந்த மேலாளர் தனது மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர் கூறிய பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு சாலை ஓரத்தில் அந்த மேலாளரிடம் பேசிய வாலிபர் நின்று கொண்டு இருந்தார். அவரை பார்த்ததும் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திய மேலாளர், அந்த வாலிபரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
தாக்கி செல்போன், பணம் பறிப்பு
அப்போது திடீரென்று அங்கு மறைந்து இருந்த 4 பேர் புதருக்குள் இருந்து வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் அந்த மேலாளரை சூழ்ந்து கொண்டனர். தொடர்ந்து அந்த வாலிபர் உள்பட 5 பேரும் சேர்ந்து மேலாளரை சரமாரியாக தாக்கினார்கள்.
அத்துடன் அவரிடம் இருந்த செல்போனை பறித்ததுடன், அதில் இருந்த கூகுள் பே மூலம் வங்கி கணக்கில் இருந்த ரூ.20 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் 5 பேரும் சேர்ந்து தாக்கியதில் தலையில் காயம் அடைந்த மேலாளர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி கோவில்பாளையம் வந்தார்.
கும்பலுக்கு வலைவீச்சு
அப்போது அங்கு ஒரு ஓட்டலில் நின்று கொண்டு இருந்த அவருடைய நண்பர்கள், மேலாளரை பார்த்து நடந்ததை கேட்டு தெரிந்து கொண்டதுடன், அவரை மீட்டு, அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலாளரை ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து தாக்கி, பணம், செல்போனை பறித்துச்சென்ற 5 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.