கஞ்சா வியாபாரிகளை கைது செய்யச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
|காவலர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
சென்னை கண்ணகி நகரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்யச் சென்ற போது, கஞ்சா போதையில் இருந்த சிலர் கண்மூடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தொடங்கி அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக எழும் பொதுமக்களின் புகார்களின் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு நடைபெறும் கஞ்சா விற்பனை தொடர்பான பொதுமக்களின் புகார்களை அலட்சியாக எதிர்கொண்டதன் விளைவாக, தற்போது காவல்துறையினர் மீதே கஞ்சா வியாபாரிகள் தாக்குதல் நடத்தும் அளவிற்கு அசாதாரண சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதோடு, காவலர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.