அரியலூர்
காதல் திருமண தகராறில் முதியவர் மீது தாக்குதல்
|காதல் திருமண தகராறில் முதியவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன்(வயது 60). இவரது மகள் தீபா அதே பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பவரின் மகன் கலைராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இரு குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணேசன், கணேசன் மகன் செந்தில், அவர்களது உறவினர் சுந்தரம் மகன் முருகன் ஆகியோர் அர்ஜுனனை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் தடுத்தபோது கையில் வைத்திருந்த ஆயுதத்தை காட்டி மிரட்டி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அர்ஜுனன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.