மதுரை துணை மேயர் வீடு புகுந்து தாக்குதல் - முத்தரசன் கண்டனம்
|எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
மதுரை மாநாகராட்சியின் துணை மேயர் தி.நாகராஜன் வீட்டில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள வன்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டு வரும் தி.நாகராஜன் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நீண்ட காலமாக பொது வாழ்வில் இருப்பவர். இவரது வீட்டில் நுழைந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு சென்றுள்ளனர் என்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, அவர்களில் எவரும் சட்டத்தின் சந்து, பொந்துகளையும், இண்டு, இடுக்களையும் பயன்படுத்தி தப்பி விடாமல் வழக்கை உறுதியாக நடத்தி தண்டிக்க வேண்டும். இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள காரணங்களும் முழுமையாக விசாரித்து எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசையும், காவல்துறையினையும் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.