செய்தியாளர் மீது தாக்குதல்: அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது - சீமான்
|காவல்துறையினரின் அலட்சியப் போக்கினாலேயே இவ்வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
திருப்பூர், பல்லடத்தைச் சேர்ந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளரான தம்பி நேசபிரபு மீது சமூக விரோதிகள் கோரத்தாக்குதல் தொடுத்த செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் அதிகரித்து வரும் வன்முறை வெறியாட்டங்களும், கொலைவெறிச்செயல்களும், ஆணவக் கொலைகளும் சட்டம் ஒழுங்கின் இலட்சணத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
பத்திரிகையாளரான தம்பி ஷபீர் அகமதுவுக்கு வெளிப்படையாகக் கொலைமிரட்டல் விடுக்கப்படுவதும், பத்திரிக்கையாளரான தம்பி நேசபிரபு மீது கொலைவெறித்தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதுமான கொடும் நிகழ்வுகள் அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகின்றன. தம்பி நேசபிரபு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் கூறியும், தகுந்த நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரின் அலட்சியப் போக்கினாலேயே இவ்வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. தம்பி நேசபிரபு மீதானத் தாக்குதலுக்கு எனது வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, தம்பி நேசபிரபுவைத் தாக்கிய கொடுங்கோலர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளின் வழக்குத் தொடுத்து, உடனடியாக அவர்களை சிறைப்படுத்த வேண்டுமெனவும், தம்பி நேசபிரபு உடல்நலம் பெற்று, மீண்டுவர தகுந்த மருத்துவச்சிகிச்சை வழங்கப்படுவதையும், அவரது முழு பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.