< Back
மாநில செய்திகள்
வருமான வரி அதிகாரிகள் மீதான தாக்குதலை  மத்திய அரசு வேடிக்கை பார்க்காது -முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு
மதுரை
மாநில செய்திகள்

வருமான வரி அதிகாரிகள் மீதான தாக்குதலை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது -முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

தினத்தந்தி
|
1 Jun 2023 3:29 AM IST

வருமான வரி அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

திருமங்கலம்,

வருமான வரி அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னமங்கலம் கிராமத்தில் திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். பொன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ் ஜெயமணி முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொன்னமங்கலம் கிராம ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை தொடர்ந்து ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 5 வருடத்தில் நிதியை அள்ளித் தந்தோம். தற்போது நிதியே இல்லை என கூறுகின்றனர். இந்த நிலையில் ரூ.30 ஆயிரம் கோடியை கொள்ளையடித்ததாக தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். 25 பேர் கள்ளச்சாராயத்தில் இறந்துள்ளனர். 13 ஆண்டு கால வரலாற்றில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் யாரும் கிடையாது. மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றார். இரண்டு வருடம் ஆகி விட்டது. அதுபற்றி சிந்திக்கவே இல்லை. கேள்வி கேட்டால் மதுபாரை மூடுகிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் பக்கத்திலேயே லைசென்ஸ் இல்லாமல் பார் திறக்கின்றனர்.

வேடிக்கை பார்க்காது

தமிழகத்தில் 12,618 ஊராட்சிகளிலும் முடிவெடுத்துள்ளனர். தீர்மானங்களை போட்டு விட்டனர். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வந்தால் தான் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும் என கருகின்றனர்.

தி.மு.க. அமைச்சர் வீட்டில் மத்திய அரசு சோதனை செய்யும் போது ஒன்றுமில்லை என்றால் திறந்து விட வேண்டும். ஆனால் ஒரு பெண் அதிகாரியை கையை உடைத்து விட்டனர். கொள்ளையடித்த பணத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இதை செய்தனர். எனக்குத் தெரிந்து மத்திய அரசின் வருமானவரித்துறை தொழிலதிபர், நடிகர், அரசியல்வாதி உள்ளிட்டவர்களிடம் விசாரணைக்கு செல்லும்போது ஒத்துழைப்பு கொடுப்பார்கள், முதன் முதலில் வருமானவரி துறையை விசாரிக்க வந்தவர்களை கை, கால்களை உடைத்து மருத்துவமனையில் போட்ட பெருமை தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜிக்குதான் உண்டு. இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்