< Back
மாநில செய்திகள்
மாட்டின் உரிமையாளர் வீட்டின் மீது தாக்குதல்
திருவாரூர்
மாநில செய்திகள்

மாட்டின் உரிமையாளர் வீட்டின் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
26 Aug 2023 12:15 AM IST

மாட்டின் உரிமையாளர் வீட்டின் மீது தாக்குதல்

கூத்தாநல்லூர் அருகே மாட்டின் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

4 பேர் மீது தாக்குதல்

கூத்தாநல்லூர் அருகே உள்ள மரக்கடை வ.உ.சி. காலனி தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 65). விவசாயி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மாடு ஒன்று தெருவோரத்தில் நின்றது. அப்போது வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்த அம்பிகாபதி என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மாட்டின் மீது மோதியது. இதில் அம்பிகாபதிக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அம்பிகாபதி தம்பி சுரேந்தர், அவரது நண்பர்கள் ஜெயக்குமார், சபரிநாதன், இளமாறன் ஆகிய 4 பேரும் சேர்ந்து மாட்டின் உரிமையாளர் ஜெயபால் மற்றும் அவரது மனைவி செல்வி, மகன் சரவணவேல், உறவினர் ஸ்ரீதர் ஆகிய 4 பேரையும் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த 4 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீட்டின் மீது தாக்குதல்

இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் ஜெயபால் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தர், ஜெயக்குமார், சபரிநாதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாகி இருந்த இளமாறன் (30) தனது நண்பர்களை அழைத்துச்சென்று நேற்றுமுன்தினம் இரவு 1 மணிக்கு தன் மீது போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டி ஜெயபால் மற்றும் பக்கத்தில் உள்ள பாலகிருஷ்ணன் ஆகியோரின் வீட்டு ஜன்னல், கண்ணாடி மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

5 பேர் கைது

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் கோரையாறு தெற்கு தெருவைச்சேர்ந்த இளமாறன் (30), மன்னார்குடி பாமணி பகுதி உள்ளூர்வட்டம் கிராமத்தை சேர்ந்த கதிரவன் (24), ஹரிராஜ் (26), அருண்ராஜ் (24), அஜித்குமார் (27) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்