< Back
மாநில செய்திகள்
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
26 Aug 2023 8:21 PM GMT

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல்

என்ஜினீயர்

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம், பங்களா பஸ் நிறுத்தம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். சிவில் என்ஜினீயர். இவரது மனைவி மங்கையற்கரசி (வயது 32). இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் அவர்கள் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இதையடுத்து மங்கையற்கரசி பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு, ரோஸ் நகரில் உள்ள வினோத்குமாரின் தங்கையான செல்வி என்பவரது வீட்டிற்கு நேற்று காலை 8.30 மணியளவில் சென்று, தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி திடீரென்று வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மங்கையற்கரசி, வீட்டில் இருந்த தனது கணவர் வினோத்குமார், மாமனார் பெருமாள், மாமியார் கமலா, நாத்தனார் செல்வி ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கல்லால் அடித்தார்

இதனால் செல்வி தனது வீட்டின் முன்பு ஏன் பிரச்சினை செய்கிறாய் என்று கேட்டு, அருகில் இருந்த கல்லை எடுத்து மங்கையற்கரசியின் தலையில் அடித்ததாக தெரிகிறது. இதில் மங்கையற்கரசியின் முன்பக்க தலையின் இடதுபுறம் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. கமலா காலணியாலும் (செருப்பு), பெருமாள் கைகளாலும் மங்கையற்கரசியை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் இனி அங்கு வரக்கூடாது என்று கூறி அவர்கள் மங்கையற்கரசியை விரட்டி உள்ளனர். அப்போது அருகில் இருந்த வினோத்குமார் அது பற்றி எதுவும் கேட்காமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மங்கையற்கரசி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு தலையில் 2 தையல் போடப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மங்கையற்கரசியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள பில்லாத்துறையை சேர்ந்த பெற்றோரை இழந்த மங்கையற்கரசிக்கும், பெரம்பலூரை சேர்ந்த வினோத்குமாருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்பு வினோத்குமாரும், மங்கையற்கரசியும் துறைமங்கலம் பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சிறிய, சிறிய பிரச்சினைகளின் காரணமாக பெரிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வினோத்குமார் தனது தங்கை செல்வியின் வீட்டிற்கு வந்து வசித்து வந்தார்.

ஏற்கனவே போலீசில் புகார்

இந்த சம்பவம் தொடர்பாக மங்கையற்கரசி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில், போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது வினோத்குமார் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக எழுதி கொடுத்துள்ளார். ஆனால் மங்கையற்கரசி தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், தான் கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்றுக்கொள்வதாகவும் கூறி சென்றுள்ளார்.

இந்த நிலையில் மங்கையற்கரசி நேற்று காலை வினோத்குமாரின் தங்கை செல்வி வீட்டிற்கு சென்று மீண்டும் தான் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் எனக்கூறி, அவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே வினோத்குமார், தன்னை தனது மனைவி மங்கையற்கரசி அடித்ததில் காயம் ஏற்பட்டதாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்