கடலூர்
ஓடும் பஸ்சில் மாணவி மீது தாக்குதல்
|கடலூர் முதுநகரில் ஓடும் பஸ்சில் மாணவியை தாக்கிய மாணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அருகே உள்ள கம்பளிமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடலூர் முதுநகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாணவி பள்ளி முடிந்து பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கடலூர் முதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சித்திரப்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவர், மாணவியிடம் நீ கம்பளி மேடு பகுதியை சேர்ந்தவரா? என கேட்டு உள்ளார்.
அதற்கு அவர் ஆமாம் என்று கூறவே, அந்த மாணவர் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் பஸ் செம்மங்குப்பம் பஸ் நிறுத்தம் சென்றபோது, அங்கு அடையாளம் தெரிந்த 6 பேர் ஏறி, மாணவருடன் சேர்ந்து மாணவியை தாக்கி உள்ளனர்.
7 பேர் மீது வழக்கு
அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த 2 மாணவர்கள் இதை தட்டிக்கேட்டனர். அதற்கு நீங்களும் கம்பளிமேட்டை சேர்ந்தவர்களா? என்று கேட்டு அவர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், தனியார் பள்ளி மாணவர் உள்பட 7 பேர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.