< Back
மாநில செய்திகள்
கரூர் அருகே வக்கீல் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
கரூர்
மாநில செய்திகள்

கரூர் அருகே வக்கீல் உள்பட 3 பேர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
4 Oct 2023 12:00 AM IST

கரூர் அருகே சவுக்கு சங்கர் ஆதரவாளரான வக்கீல் உள்பட 3 பேர் மீது 6 பேர் கொண்ட கும்பல் வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில், படுகாயம் அடைந்த வக்கீல் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.

சவுக்கு சங்கர் ஆதரவாளர்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 50), வக்கீல். இவர் சவுக்கு சங்கர் ஆதரவாளர் என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை சவுக்கு சங்கர் யூ-டியூப் சேனலின் அட்மின்களான சூர்யா, பிரதீப் ஆகியோர் ராஜாவை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து ஒரு காரில் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரும் தவிட்டுப்பாளையம் அருகே உள்ள பாலத்துறை கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் எதிரே உள்ள ஒரு பேக்கரியின் வெளியே நின்று டீ குடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, ஒரு காரில் வந்த இறங்கிய அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் வக்கீல் ராஜா, சூர்யா, பிரதீப் ஆகியோரை வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.

வக்கீல் படுகாயம்

இதில், வக்கீல் ராஜாவுக்கு தாடை மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. சூர்யா மற்றும் பிரதீப் ஆகியோர் தாக்குதல் நடத்தியவர்களை திருப்பி தாக்கியுள்ளனர். இதனால் மர்ம ஆசாமிகள் 6 பேரும் தாங்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனைதொடர்ந்து, சூர்யா பிரதீப் ஆகியோர் தாங்கள் வந்த காரில் அவர்களை துரத்திக் கொண்டு சென்றனர். ஆனால் அந்த ஆசாமிகள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சூர்யா, பிரதீப் ஆகியோர் பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வலைவீச்சு

இதையடுத்து, பலத்த காயம் அடைந்த ராஜா தனது மோட்டார் சைக்கிளில் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து வக்கீல் ராஜா அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

சவுக்கு சங்கர் ஆதரவாளர்கள் பாலத்துறை பகுதியில் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்