கிருஷ்ணகிரி
2 வயது குழந்தை உள்பட 3 பேர் மீது தாக்குதல்
|உத்தனப்பள்ளி அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராயக்கோட்டை:-
உத்தனப்பள்ளி அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலப்பிரச்சினை
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த அகரம் முருகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34), இவர் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது தந்தையிடம் நிலம் வாங்கி வீடு கட்டி வருகிறார். இதில், சிலம்பரசன் தரப்புக்கும், ரமேஷ் தரப்புக்கும் நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசில் புகாரும் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிலம்பரசன் நேற்று காலையில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே இருந்தார். அவருடைய மனைவி தனலட்சுமி, தம்பி மனைவி அனிதா ஆகியோரும் இருந்துள்ளனர்.
5 பேர் மீது வழக்கு
அங்கு வந்த ரமேஷ் தரப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் சிலம்பரசனிடம் தகராறு செய்துள்ளனர். வீட்டின் முன் போடப்பட்டு இருந்த ஷெட்டை அடித்து நொறுக்கினர். அங்கிருந்தவர்களை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் சிலம்பரசனின் மனைவி தனலட்சுமி மற்றும் தம்பி மனைவி அனிதா, 2 வயது குழந்தை ஆகியோரையும் தாக்கியதாக ெதரிகிறது. இந்த தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.