< Back
மாநில செய்திகள்
ரவுடிகள் கோஷ்டி மோதலில் அட்டூழியம்: பெட்ரோல் குண்டுகளை வீசிய 19 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ரவுடிகள் கோஷ்டி மோதலில் அட்டூழியம்: பெட்ரோல் குண்டுகளை வீசிய 19 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி

தினத்தந்தி
|
12 Oct 2022 2:34 PM IST

ஆலந்தூரில் 2 ரவுடிகள் கோஷ்டி மோதலில் பெட்ரோல் குண்டுகளை வீசி வாகனங்களை அடித்து நொறுக்கிய 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை அடுத்த ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் நேற்று முன்தினம் இரவு 20 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியது. பின்னர் அந்த கும்பல் ஆபிரகாம் தெருவில் உள்ள ஜீவசமாதி மடத்தில் பெட்ரோல் குண்டை வீசியது. மேலும், அங்கு நின்றிருந்த நவீன் (வயது28), தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் சபீக், அபுபக்கர் ஆகியோரை வெட்டி விட்டு கும்பல் தப்பி சென்றது.

இது பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ரோந்து போலீசார் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த நாகூர் மீரான் தலைமையில் ரவுடி கோஷ்டியாகவும், ராபின்சன் தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வந்ததும், கடந்த ஆண்டு நாகூர் மீரானை ராபின்சன் கோஷ்டி கொலை செய்த நிலையில் ராபின்சனை கொலை செய்ய நாகூர் மீரான் தரப்பு சுற்றிக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக ராபின்சன் தரப்பினர் நாகூர் மீரான் கோஷ்டியினரை தாக்க வந்த நிலையில் அங்கு இல்லாததால் அங்கு இருந்த மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ அடித்து நொறுக்கியது விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன், கிண்டி உதவி கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர்கள் திருமால், செல்லப்பா, சிவக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் பதுங்கி இருந்த ரவுடி ராபின்சன் கோஷ்டியை சேர்ந்த அவரது தம்பி சஞ்சய், மணி, நவீன் குமார் உள்பட 19 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது பரங்கிமலை போலீசார் சட்டவிரோதமாக கூடுதல், கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்கள் உள்பட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்