< Back
மாநில செய்திகள்
வன்கொடுமை வழக்கு: போலி என்.சி.சி. முகாம்கள் குறித்து விசாரணை - கிருஷ்ணகிரி ஆட்சியர்
மாநில செய்திகள்

வன்கொடுமை வழக்கு: போலி என்.சி.சி. முகாம்கள் குறித்து விசாரணை - கிருஷ்ணகிரி ஆட்சியர்

தினத்தந்தி
|
19 Aug 2024 5:28 PM IST

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் கைதுசெய்யப்பட்டுள்ளார். என்.சி.சி. முகாமில் வைத்து இந்த சம்பவம் நடைபெற்றதாக சிவராமன், பள்ளி முதல்வர், தாளாளர் உள்ளிட்ட எட்டு பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சிவராமன், என்.சி.சி. போலி பயிற்சியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி.யில் பதிவு செய்த, எந்த ஒரு மையமும் பயிற்சி முகாம் நடத்தவில்லை என்றும், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான சிவராமன் என்ற நபருக்கும், என்.சி.சி-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், என்.சி.சி. தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பற்றி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;

"கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. என்.சி.சி. முகாம் தொடர்பாக முறையான நடைமுறைகளை பள்ளி பின்பற்றவில்லை. எந்தெந்த பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

மேலும் சில மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக புகார் அளித்துள்ளனர். மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க 1098 என்ற எண்ணை மாணவிகள் தொடர்பு கொள்ளலாம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்