திருச்சி
பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம்; இந்திய மாதர் தேசிய சம்மேளன பொதுச்செயலாளர் ஆனிராஜா குற்றச்சாட்டு
|பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் என்று இந்திய மாதர் தேசிய சம்மேளன பொதுச்செயலாளர் ஆனிராஜா குற்றம்சாட்டினார்.
மாநில மாநாடு
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) சார்பில் திருச்சி அரிஸ்டோ எல்.கே.எஸ்.மகாலில் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இன்று மாலை கருத்தரங்கமும், நாளை மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் நடக்கிறது.
இதுகுறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளன அகில இந்திய பொதுச்செயலாளர் ஆனிராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வன்கொடுமைகள்
இந்திய மாதர் தேசிய சம்மேளனம், நாட்டின் விடுதலைக்காக போராடிய பெண்களால் 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இந்தியாவின் 27 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் அகில இந்திய மாநாடு டிசம்பர் மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மேற்குவங்காளத்தில் நடக்கிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சியில் மாநாடு நடத்தப்படுகிறது.
பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து இருக்கிறது. மணிப்பூர் சம்பவம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் என பலவற்றை கூறலாம். பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களுக்கு கட்சி அளவில் பாதுகாப்பு கிடைக்கிறது. பெண்களை பாதுகாக்க நாங்கள் போராடி கொண்டு வந்த சட்டங்களுக்கு மதிப்பு இல்லாமல் செய்கிறார்கள்.
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு
பா.ஜனதா அரசு பெண்களுக்காக எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதன் பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கிறது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடந்த 2021-ம் ஆண்டு எங்கள் சம்மேளனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றம் கடும் ஆட்சேபத்தை தெரிவித்து, மத்திய அரசு உள்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நோட்டீசு அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாகத்தான் பா.ஜனதா அரசு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக சட்டமசோதா தாக்கல் செய்தது. தமிழகத்தில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது வரவேற்புக்குரியது. இந்த தொகையை அதிகப்படுத்தி தருவதோடு, அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.
வரதட்சணை ஒழிப்பு
மேலும், வரதட்சணையை ஒழிக்க கடும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதேநேரத்தில், புதுமண தம்பதிகளுக்கு தங்கள் வாழ்க்கையை தொடங்க அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.