< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 7,822 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகள்

தினத்தந்தி
|
16 Sept 2023 12:34 AM IST

திருமயம், ஆலங்குடி தாலுகாவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 7,822 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர்கள் வழங்கினர்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சீபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் சிவபுரத்தில் உள்ள ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், திருவரங்குளம் அம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்து, அத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 பணம் எடுக்கும் ஏ.டி.எம். அட்டைகளை தகுதியான குடும்ப தலைவிகளுக்கு வழங்கினர். அப்போது மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உடனிருந்தார்.

7,822 பயனாளிகள்

இதையடுத்து, திருமயம் தாலுகாவில் 3,391 மகளிருக்கும், ஆலங்குடி தாலுகாவில் 4,431 மகளிருக்கும் என மொத்தம் 7,822 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 நேற்று முன்தினம் வரவு வைக்கப்பட்டன. இத்திட்டத்தில் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அதுபற்றிய விவரம் தங்களுக்கு வரவில்லை என்றனர்.

மேலும் செய்திகள்